திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை திட்டம் செயல்படுத்த வேண்டும்; எம்.பி., தங்கத்தமிழ்செல்வன் வலியுறுத்தல்
‘திண்டுக்கல் -சபரிமலை அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,’ என மதுரையில் நடந்த தெற்கு ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் தேனி எம்.பி., தங்கத் தமிழ் செல்வன் வலியுறுத்தினார்.
அவர் பேசியதாவது:
திண்டுக்கல் -சபரிமலை ரயில்பாதை திட்டம் செயல்படுத்த வேண்டும் என 60 ஆண்டுகளாக கோரி வருகிறோம். சபரிமலைக்கு ஆண்டுக்கு 1.5 கோடி பக்தர்களும், மாதந்தோறும் 5 லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ரயில்வேக்கு வருமானம் தரக்கூடிய இத் திட்டதை ஏன் செயல்படுத்தவில்லை. சபரிமலை வரை சாத்தியக்கூறு இல்லையென்றால் திண்டுக்கல் -பம்பை வரை, அல்லது லோயர்கேம்ப் வரை அகலரயில் பாதை அமைக்கலாம். மிக அவசியமான இத் திட்டம் குறித்து இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது எனக்கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ரயில்வே அதிகாரிகள், ‘மத்திய வனத்துறையில் அனுமதி பெற வேண்டியிருப்பதால் சபரிமலை வரை ரயில்பாதை அமைக்க சாத்தியக் கூறுகள் குறைவு. திண்டுக்கல் -பம்பை அகல ரயில்பாதைக்கான ஆய்வு நடத்தி உள்ளோம். வரும் ஆண்டில் மத்திய அரசிடம் இத் திட்டத்தை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
தொடர்ந்து எம்.பி., தங்கத்தமிழ்செல்வன் பேசியதாவது: தேனி மாவட்டம் வள்ளல்நதி, மதுரை மாவட்டம், வாலாந்துாரில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும். வாலாந்துாரில் 60 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு ரயில்வே ஸ்டேஷன் அமைக்க வேண்டும். ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோயில் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்குவதால் சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்து செல்லசிரமம் அடைகின்றனர். சுரங்கபாதையில் மேற்கூரை அமைத்து மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில்கள் நின்று செல்ல போதிய இட வசதி, தண்ணீர் வசதி, மின்சார லைன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. எனவே சில ரயில்களை போடிவரை நீடிக்க வேண்டும். போடி -ராமேஸ்வரம் இடையே ரயில் இயக்க வேண்டும் என்றார்.இதற்கு பதில் அளித்த ரயில்வே அதிகாரிகள் இக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றனர்.