Monday, October 20, 2025
மாவட்ட செய்திகள்

கம்பம் பள்ளத்தாக்கில் பன்னீர் திராட்சை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு

பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு கிடைத்து இரண்டாண்டுகளான நிலையில் திருப்தியான விலை கிடைத்துள்ளது. இந்நிலையில் சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளதாக திராட்சை விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டு முழுவதும் திராட்சை சாகுபடி நடக்கும்.ஆண்டிற்கு மூன்று அறுவடை செய்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள மண் வளம், கிடைக்கும் மழை, நிலவும் சீதோஷ்ண நிலையே இங்கு திராட்சை சாகுபடிக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், செரிமானக் கோளாறுகளை சரி செய்யும், கேன்சர் நோய்க்கு எதிராக செயல்படுவது என பல சிறப்புகள் கொண்டது. கோவை, திண்டுக்கல் பகுதியில் பயிரிடப்படும் பன்னீர் திராட்சையை காட்டிலும், கம்பம் பள்ளத்தாக்கில் விளையும் பன்னீர் திராட்சைக்கு சுவை அதிகம். கடந்த 2023ல் புவிசார் குறியீடு கிடைத்தது. இதனால் கிடைத்த சமூக அங்கீகாரத்தால் திராட்சை சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விலை உயர்வு

சுருளிப்பட்டி திராட்சை சாகுபடியாளர்கள் சங்க தலைவர் முகுந்தன் கூறியதாவது: பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது ஒரு அங்கீகாரமாக கருதுகிறோம். அதன் பின் விலை உயர்ந்து. அதே போல 2 ஆயிரம் ஏக்கர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. பழநி பஞ்சாமிர்தம், திருநெல்வேலி அல்வா, திருப்பதி லட்டு போன்று கம்பம் பன்னீர் திராட்சைக்கும் பொது வெளியில் பிரபலமாகி உள்ளது. மார்க்கெட்டில் மதிப்பு கூடியுள்ளது. இந்த சீசனில் விலை கிலோவிற்கு ரூ.40 க்கு மேல் கிடைத்துள்ளது. புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், ஏற்றுமதி செய்வதற்கு தோட்டக்கலைத்துறை, வேளாண் மார்க்கெட்டிங் துறைகள் அபேடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் ஒயின் தொழிற்சாலை அமைக்கும் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். அல்லது தனியார் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி அமைக்கப்பட்டால் பன்னீர் திராட்சை சாகுபடியாளர்கள் மேலும் பயனடைவார்கள். ஏற்றுமதி செய்வதற்குரிய தொழில் நுட்பங்களை திராட்சை ஆராய்ச்சி நிலையம் வழங்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *