Monday, April 28, 2025
தமிழக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது; பண்டிகை கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தப்படுகிறது. சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசுத் தொகை ரூ.1,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பலன் பெறும் திட்டம் இந்தாண்டே அமல்படுத்தப்படும்.

பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஆராய்ந்து செப்டம்பரில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம், கலை அறிவியலுக்கு ரூ.50,000 முன்பணம் வழங்கப்படும்.

பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெற மகப்பேறு விடுப்பு காலமும் இனி தகுதிக்கான காலமாக எடுத்துக் கொள்ளப்படும் என அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 9 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

காவலர்களுக்கான அறிவிப்பு


முதல்வர் அறிவித்ததாவது; பணியில் இருக்கும் காவலர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். காவலர்களுக்கு வார விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

காவலர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. காவலர் சேமநல நிதி ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது.

சட்ட முன்வடிவு


கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்தப் பல்கலையின் வேந்தராக முதல்வர் இருப்பார். இந்தப் பல்கலையின் கீழ் 36 கல்லூரிகள் இயங்கும், எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *