பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 5 ஆயிரம் செவ்வாழை மரங்கள் சேதம்
தேனி மாவட்டம் சின்னமனுார் அருகே முத்துலாபுரத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 5 ஆயிரம் செவ்வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தது.
தேனி மாவட்டத்தில் அதிகளவில் வாழை சாகுபடி உள்ளது. செவ்வாழை, ஜி 9, நாழிப்பூவன், நேந்திரன் உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடியாகிறது. சில நாட்களாக மாவட்டத்தில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு உத்தமபாளையம், கோம்பை, சின்னமனுார் வட்டாரங்களில் பெய்ய துவங்கிய மழை இரவு 7:00 மணி வரை நீடித்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது.
இதனால் சின்னமனுார் அருகே முத்துலாபுரம், பெருமாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயராக இருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் ஓடிந்து சாய்ந்தன. பல லட்சம் ரூபாய் பாதிப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கினர்.
உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன் தலைமையில் வருவாய் மற்றும் வேளாண், தோட்டக்கலைத்துறையினர் பயிர் சேதங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
முத்துலாபுரம் வாழை விவசாயி முருகன் கூறியதாவது: தோட்டத்தில் 600 செவ்வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இவை காற்றில் ஒடிந்து விழுந்தது. எங்கள் கிராமத்தில் பல தோட்டங்களில் குறைத்தது 5 ஆயிரம் வாழை மரங்கள் இந்த மழை மற்றும் காற்றால் சேதமடைந்துள்ளன. ஒராண்டாக வளர்த்து பலன் பெறும் நேரம் ஏற்பட்ட இழப்பு கடுமையாக எங்களை பாதித்துள்ளது. எனவே மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.