பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோயிலை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல் -எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் ஆய்வு
கூடலுாரில் பழமை வாய்ந்த தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயிலில் எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார்.
கூடலுாரில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயில் உள்ளது.
இக்கோயில் கோபுரம் மற்றும் முன் மண்டபம் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கோயிலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தேனி எம்.பி., தங்க தமிழ் செல்வனிடம் வலியுறுத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை சைக்கிள் பயணமாக வந்த எம்.பி., கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வந்த பக்தர்களிடம் கோயில் தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார். விரைவில் அரசுக்கு பரிந்துரை செய்து கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக எம்.பி., தெரிவித்தார். ஹிந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் ஜெகன், பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்பாபு, நிர்வாகி தெய்வம் மற்றும் கோயில் வார வழிபாட்டு குழுவினர் உடன் இருந்தனர்.