Tuesday, May 6, 2025
தமிழக செய்திகள்

நீட் நுழைவு தேர்வை சுமையாக்கும் மாநில பாடத்திட்டம்; தமிழக மாணவர்கள் திணறல் தவிர்க்கப்படுமா

நீட் தேர்வுக்கு உட்பட்ட என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தில் இல்லாத பல பகுதிகள் மாநில பாடத்தித்தில் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) உள்ளதால், தமிழக மாணவர்கள் கூடுதல் பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் எளிமையாக இருக்க வேண்டிய நீட் தேர்வை கடினம் என மாணவர்கள் உணர்வதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வை தமிழகத்தில் 1.50 லட்சம் உட்பட நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) பாடத்திட்டத்தில் படிக்கும் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுடன், எஸ்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களால் எவ்வாறு போட்டியிட முடியும் என்ற சர்ச்சை தொடர்ந்து கிளப்பப்படுகிறது.

ஆனால் தமிழக அரசோ, என்.சி.இ.ஆர்.டி.,யில் இல்லாத பாடத்திட்டங்களும் மாநில பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என பெருமையாக தெரிவிக்கிறது. அதேநேரம் இதுபோன்ற கூடுதல் பாடங்களால் நீட் தேர்வுக்கு தயாராகும் தமிழக மாணவர்கள் திணறுவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

‘நீட் தேர்வுக்குரிய என்.சி.ஆர்.டி.இ., பாடத் திட்டத்தில் இல்லாத பகுதிகளை மாநில பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்களில் இருந்து நீக்க வேண்டும்’ என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். ஆனாலும், இந்தாண்டும் அதே பாடத் திட்டங்கள் தொடரும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: நீட் தேர்வுக்கான வினாக்கள் முழுவதும் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள எஸ்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அதிக பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக வேதியியலில் திடநிலைமை, உலோகவியல் புறப்பபரப்பு வேதியியல், நடைமுறை வேதியியல், ‘பி’ தொகுதி தனிமங்களின் சேர்மங்கள் போன்ற பாடங்கள் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தில் இல்லை. ஆனால் தமிழகத்தில் இப்பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதுபோல், இயற்பியல், விலங்கியல், தாவரவியல் பாடங்களில் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டங்களை விட 25 சதவீதம் பாடங்கள் அதிகமாகவே படிக்கின்றனர். ஆனால் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் இப்பாடங்களை பிளஸ் 1, பிளஸ் 2 வில் படிப்பதில்லை. அவர்கள் நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களை மட்டுமே இரண்டு ஆண்டுகளும் முழுமையாக படிக்கின்றனர். மாநில பாடத்திட்டத்தில் இப்பாடங்களை குறைத்தால் தமிழக மாணவர்களின் நீட் தேர்வு தேர்ச்சி அதிகரிக்கும்.

ஆனால் போட்டித் தேர்வுகளுக்கு இதுபோன்ற கூடுதல் பாடத்திட்டங்கள் பயன்படும் என்ற வகையில் பாடங்களை குறைக்க அரசு முன்வரவில்லை. இதனால் மாணவர்களுக்கு பாடச்சுமை ஏற்படுகிறது. இதுதொடர்பாக மாணவர்களிடம் கருத்துக் கேட்டு என்.சி.இ.ஆர்.டி.,யில் இல்லாத கூடுதல் பாடங்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *