காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்
காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேற்காசியா நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தலையீட்டால் தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் 59 பேரை விடுவிக்க மறுத்துள்ளனர். இதனால் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதலை துவங்கியுள்ளது.
காசாவின் 50 சதவீத பகுதிகளை இஸ்ரேல் ஏற்கனவே தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டது. இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவம் காசாவில், அதன் நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கான திட்டத்தை பிரதமர் நெதன்யாகுவிடம் சமீபத்தில் தெரிவித்தது.
இதன்படி, காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் அமைச்சரவை நேற்று இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.