பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர், வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சுற்றுலா பயணியரை சுற்றி வளைத்து, ஹிந்துக்களை அடையாளம் கண்டு 26 பேரை குடும்பத்தினர் முன் சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக, புதன்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில், ‘ஆப்பரேஷன் சிந்துார்’ என்ற பெயரில், 9 பயங்கரவாத தளங்களை இந்தியா தாக்கியது. இதில், 80 பேர் வரை மரணம் அடைந்ததாக தெரிகிறது.
இந்தியாவின் ‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் பாகிஸ்தான், எல்லை தாண்டிய தாக்குதலில் ஈடுபட்டது. இதில், குறைந்தது 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 54 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், காஷ்மீர் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். 5 எப்.டி., ரெஜிமென்ட் பிரிவை சேர்ந்த ராணுவ வீரர் தினேஷ் குமார், வீர மரணம் அடைந்துள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூஞ்ச் பகுதியில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒற்றுமையுடன் நிற்பதாக, இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.