Friday, July 18, 2025
தமிழக செய்திகள்

துறைமுகம், விமான நிலையத்தில் போர் ஒத்திகை

சென்னை விமான நிலையம் மற்றும் எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில், பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு படையினர் நேற்று போர் ஒத்திகை நடத்தினர்.

நேற்று மாலை 4:00 முதல் 5:00 மணி வரை, இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு பகுதிகளில் தாக்குதல் மற்றும் கடலோர பகுதியில் சந்தேகத்திற்கு இடமான அதிவேக படகு ஊடுருவல் ஆகிய, இரட்டை அச்சுறுத்தல் நிலை உருவாக்கப்பட்டது.

காமராஜர் துறைமுகம், அதன் பங்குதாரர்கள், மாவட்ட நிர்வாகம், இந்திய கடலோர காவல் படை, தமிழக காவல் துறை, தேசிய பேரிடர் மீட்பு படை, எண்ணெய் நிறுவனங்கள், துறைமுக பயனாளர்கள், மாநில மருத்துவ குழு மற்றும் தன்னார்வலர்கள் மற்றும் முதன்மை மீட்பாளர்கள் உட்பட, 270 பேர், இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.

ஒத்திகை நிகழ்வு முடிந்தவுடன், காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா தலைமையில், மாவட்ட மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகையால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை உறுதிபடுத்துவதோடு, தேவையான தருணங்களில் விரைவாகவும், திறமையாகவும் செயல்பட இயலும் என்பதும் நிரூபிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மேலா ண்மை வீரர்கள், தமிழக காவல் துறையினர் இணைந்து, போரின் போது பயணியரை எவ்வாறு மீட்பது; பயணியர் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது; என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது.

மணலியில்…

மணலி, சி.பி.சி.எல்., பெட்ரோலிய நிறுவன வளாகத்தில், நேற்று மாலை வான் தாக்குதல் குறித்த அவசர கால ஒத்திகை, மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் நடந்தது.

உற்பத்தி வளாகம், அலுவலக வளாகம் ஆகிய இரு இடங்களில் வான் தாக்குதல் நடத்தப்பட்டால், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து விவரிக்கப்பட்டது.

உற்பத்தி வளாகம் தாக்குதலுக்கு ஆளாகும் போது, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் பயன்பாடு பற்றியும், ஊழியர்கள் யாரனும் சிக்கியுள்ளனரா என்பதை அறிய, தேசிய பேரிடர் மேலாண்மை குழு வீரர்கள், ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவது போன்ற ஒத்திகை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி, மணலி மாநகராட்சி மண்டல பொறுப்பு உதவி கமிஷனர் தேவேந்திரன், திருவொற்றியூர் மண்டல உதவி செயற்பொறியாளர் நமச்சிவாயம், கவுன்சிலர்கள் காசிநாதன், ராஜேந்திரன், ராஜேஷ் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இன்று நடக்கிறது

மின் வாரியத்தின் வடசென்னை விரிவாக்க அனல்மின் நிலையம் மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையம் ஆகியவற்றில், இன்று போர் ஒத்திகை நடக்க உள்ளது.இது குறித்து, மக்கள் எவ்வித பதற்றமோ, அச்சமோ பட தேவையில்லை என, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *