மூணாறு மலர் கண்காட்சியில் இடம் பெற்ற பொழுது போக்கு அம்சங்கள் தொடரும்; சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல்
”மூணாறில் மலர் கண்காட்சியில் இடம் பெற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் மே 30 வரை தொடரும்” என, சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் மூணாறில் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் மே 1ல் துவங்கி மே 10ல் நிறைவு பெற்றது. வெளி நாடுகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட வகை பூக்கள் உட்பட 1500 வகைகளை சேர்ந்த, வண்ண வண்ணப் பூக்கள் இதில் இடம் பெற்றன. அவற்றை பத்து நாட்களில் தமிழகம் உட்பட பிற மாநிலங்களைச் சேர்ந்த 75 ஆயிரம் பயணிகள் கண்டு ரசித்தனர்.
கண்காட்சி நிறைவு பெற்றபோதும், அதில் இடம் பெற்ற பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் மே 30 வரை நீடிக்கும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக தற்போதைய காலநிலைக்கு ஏற்ற வகையிலான பூக்கள், மின் அலங்காரம், சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள், மியூசிக்கல் பவுண்டன் உள்ளிட்டவை தொடரும். மலர் கண்காட்சியின்போது இரவு 7:00 முதல் 9:00 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவை ரத்து செய்யப்பட்டு உள்ளன. பூங்காவை வழக்கம் போல் காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை ரசிக்கலாம். நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50.