ஆண்டுக்கு 150 பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் மையம் உ.பி.,யில் துவக்கம்
ஆண்டுக்கு, 100 – 150 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் உள்ள புதிய மையம் உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள லக்னோ நகரில், பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மையத்தை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இந்த மையத்தின் சிறப்பம்சங்கள்:
பிரம்மோஸ் ஏவுகணை பகலிலும், இரவிலும் விண்ணில் ஏவக்கூடியது. நிலம், நீர், வான்வெளியில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணையின் அடுத்த தலைமுறை தயாரிப்பு மையமாக, உ.பி.,யின் இந்த மையம் விளங்கும்
நம் ராணுவத்தின் டி.ஆர்.டி.ஓ., அமைப்பு மற்றும் ரஷ்யாவின் என்.எப்.ஒ., மெஷினோஸ்ரோயெனியா நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணையின் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையமாகவும், நம் ராணுவத்தின் துல்லிய தாக்குதலுக்கான அடுத்த தலைமுறை ஏவுகணை கருவிகளை சோதித்து பார்க்கும் மையமாகவும் இந்த இடம் திகழும் இப்போது, ஆண்டுக்கு 80 – 100 ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் கொண்ட இந்த மையம், வருங்காலத்தில் 100 – 150 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் கொண்டதாக உயர்த்தப் படும்.
இங்கு தயாரிக்கப்படும் அடுத்த தலைமுறை பிரம்மோஸ் ஏவுகணை எடை குறைவானதாகும். தற்போதைய, 2,900 கிலோ எடையில் இருந்து 1,290 கிலோ குறைந்த எடையில் இங்கு ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, ‘சுகோய்’ போன்ற போர் விமானங்களில் அவற்றை எளிதாக பொருத்தி, போர் முனைக்கு எடுத்துச்செல்ல முடியும்
லக்னோ மையத்தில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் மணிக்கு, 3,430 கி.மீ., வேகத்தில் பறக்கக் கூடியவை.
உத்தர பிரதேச அரசு வழங்கிய இடத்தில், 300 கோடி ரூபாய் செலவில், இதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2021ல் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மையம் தற்போது பிரம்மோஸ் ஏவுகணைகளை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது.
தமிழகத்தை அடுத்து, உ.பி.,யில் தான் ராணுவ தளவாடங்களுக்கான பிரத்யேக தயாரிப்பு வளாகம் உள்ளது.
உ.பி., அரசின் ராணுவ தொழில் கேந்திரமாக விளங்கும் இந்த மையத்திற்கு கான்பூர், அலிகார், ஆக்ரா, ஜான்சி மற்றும் சித்ரகூட் ஆகிய இடங்களில் துணை அமைப்புகள் உள்ளன.
இந்த மையத்தை உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பார்வையிட்டார்.