Monday, May 12, 2025
இந்தியா

நேற்றிரவு எல்லையில் அமைதியான சூழல்; இந்திய ராணுவம் தகவல்

”கடந்த 19 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு எல்லையில் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏதும் நிகழவில்லை. அமைதியான சூழல் நிலவியது” என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 7ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம், மாலை 5:00 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது. சனிக்கிழமை மாலை இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, நேற்றிரவு ஜம்மு-காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் பெரும்பாலும் அமைதியாக இருந்தது.

கடந்த 19 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு எல்லையில் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏதும் நிகழவில்லை. அமைதியான சூழல் நிலவியது”என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

எல்லைப் பகுதிகள் மட்டுமல்ல, சண்டிகர் உள்ளிட்ட பிற நகரங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. நேற்று இரவு ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நிகழவில்லை என பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஏப்ரல் 23ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை எல்லை பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் ட்ரோன் தாக்குதல் நடந்து வந்தது. பாகிஸ்தானின் அத்துமீறல் நடவடிக்கைக்கு, இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *