Monday, May 12, 2025
மாவட்ட செய்திகள்

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு! மாவட்ட சுகாதாரத்துறை ஏற்பாடு

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து, மழை பெய்கிறது. இந்த திடீர் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பலர் காய்ச்சலால் பாதிக்கப் படுகின்றனர்.

இதனால் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காய்ச்சல் நோய் பாதிப்பில் உள்நோயாளிகளாக உள்ளவர்கள் பற்றி தினமும் கணக்கெடுக்கும் பணிகள் நடக்கின்றன. கலெக்டர் மூலம் உள்ளாட்சிகள், மேல்நிலை குடிநீர் தொட்டிகள், சிறிய குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து குடிநீர் வினியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பொது மக்கள் வீடுகளை சுற்றி நன்னீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். திறந்த வெளியில் உள்ள பாத்திரங்கள், தொட்டிகளில் தண்ணீர் வைத்திருந்தால் அதனை வாரம் ஒரு முறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். அதே போல் வீட்டில் குளிர்சாதன பெட்டி பின்புறம் தேங்கும் தண்ணீரையும் சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த நன்னீரில் டெங்கு பரப்பும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால் அவற்றை வாரத்திற்கு 2 முறை சுத்தம் செய்வது அவசியம் என, சுகாதாரத்துறை சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் ஜவஹர்லால் கூறியதாவது: பொது மக்கள் காய்ச்சல் பாதிப்பு தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். சுய மருத்துவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதே போல் ஒரு டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்றால், குறிப்பிட்ட கால இடைவெளியில், மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒவ்வொரு டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்றால், காய்ச்சல் பாதிப்பால் உடல்நிலை மேலும் சிக்கலாகும். இந்த காய்ச்சல் ஏற்பட்டால் ரத்த தட்டணுக்கள் பாதிக்கப்படும் என்பதால் எவ்வகை காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை. அவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளில் பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்த பகுதிகளில் சிறப்பு சிகிச்சை முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *