பசுமை சூழலை அதிகரிக்க வனத்துறை தீவிரம்; மரக்கன்றுகளை இலவசமாக தந்து விழிப்புணர்வு
சின்னமனுாரை பசுமை நகரமாக மாற்ற வனத்துறை தீவிர ஏற்பாடுகளை செய்வதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சின்னமனுார் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகரின் மேற்குப் பகுதியில் நெல் வயல்களும், வெற்றிலை கொடிக்கால்களும், கரும்பு வயல்களும் உள்ளன. கிழக்கு திசையில் வாழை திராட்சை, காய்கறி தோட்டங்கள் அமைந்துள்ளன. இருந்தாலும் நகரில் பெரும்பாலான பகுதிகளில் மரங்கள் இல்லை. குறிப்பாக சின்னமனுார் உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் இரு புறமும் இருந்த வயல்வெளிகள், தற்போது வர்த்தக நிறுவனங்களாக மாறியுள்ளன. நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த மரங்களையும் தேசிய நெடுஞ்சாலைத் துறை வெட்டி தள்ளியுள்ளன.சின்னமனுார் வனச்சரகம் கடந்த சில ஆண்டுகளாகவே மரக்கன்றுகளை நடவு செய்கிறது. இலவசமாகவும் மரக் கன்றுகளை தந்து வருகிறது. மூல வைகையை புனரமைக்க வனத்துறையில் வைகை மண் வள பாதுகாப்புத்துறை என்ற ஒரு பிரிவை துவக்கினர். தற்போது அந்த பிரிவு வருஷநாடு மண்வள பாதுகாப்புத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்குகிறது. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, மயிலாடும்பாறை, சின்னமனுார் ஆகிய ஊர்களில் இதற்கு என, சரக அலுவலகங்கள் உள்ளன. சின்னமனுார் சரக வளாகத்தில் வேம்பு, பாதாம், புங்கன் உள்ளிட்ட பல வகை மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதுதவிர அரசு மருத்துவமனை, கால்நடை மருந்தகம், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. அதுதவிர விவசாயிகளுக்கும் மரக்கன்றுகளை வழங்கி உள்ளனர். இதனால் சின்னமனுார் நகரம் பசுமை போர்வைக்குள் கொண்டு வரப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
குறுங்காடு
கி.சந்தியா, ரேஞ்சர், மண்வளப் பாதுகாப்பு சரகம், சின்னமனுார் : மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு காலநிலை மாற்றத்திற்கான தமிழக உயிர்ப்பன்மை, பாதுகாப்பு, பசுமையாக்குதல் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தேனி, போடி, பெரியகுளம், மயிலாடும்பாறை, சின்னமனுார் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு மாவட்டத்தை பசுமை போர்வைக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். அரசு மருத்துவமனையில் குறுங்காடு அமைத்துள்ளோம்.
கல்லுாரி, பள்ளி, மருத்துவமனைகளில் நாங்களே நடவு செய்து பராமரித்து வருகிறோம். பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பது , நிலத்தடி நீர்மட்டம் சரிவடையாமல் காப்பது, மண் சரிவு ஏற்படுவதை தடுப்பது, குறிப்பாக சுற்றுப் புறச்சூழல் மாசுபடாமல் காப்பது குறிக்கோளாகும். விவசாயிகளுக்கு மகாகனி, செம்மரம், பாதாம், நாவல் உள்ளிட்ட மரக் கன்றுகளும், அரசு அலுவலகங்களுக்கு நீர் மருது, வேம்பு, புங்கன் போன்ற நிழல் தரும் மரக்கன்றுகளும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடவு செய்ய ஊராட்சிகளுக்கு மரக் கன்றுகளும் வழங்குகின்றோம். தனி நபர்கள் என யாராக இருந்தாலும் மரக்கன்றுகள் தர உள்ளோம். சின்னமனுாரை மாசில்லா நகராக மாற்றுவதே துறையின் இலக்கு., என்றார்.
இலவச மரக்கன்றுகள் வழங்கல்
லோகேந்திரராஜன், ஐயப்பா சேவா சங்கம், சின்னமனுார்: வீதிகளில் ஒதுங்கி நிற்கக்கூட மர நிழல் இல்லாத நிலை உள்ளது. கிடைக்கும் காலி இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்க முயற்சி செய்ய உள்ளேன். ஐயப்பா சேவா சங்கத்தில் உள்ளவர்களையும் இதில் இணைத்து மாதம் ஒரு நாள் மரக் கன்றுகள் நடவு செய்வது என்று முடிவு செய்துள்ளேன். வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் தருகின்றனர். அதிலும் பயனுள்ள பாதாம், நாவல் மரக்கன்றுகளை கண்மாய் கரைகளில் நடவு செய்தால், பலனும் கிடைக்கும். இப்போதைக்கு தலைவர்களின் பிறந்த நாள், வீடுகளில் நடக்கும் விசேஷ நாட்களில் மரக்கன்றுகளை தரவும் உள்ளோம். அனைவரும் சின்னமனூரை மாசில்லா நகராக மாற்ற முடியும். அதற்கான பணிகளை துவக்குவோம்., என்றார்.