ஆதம்பூர் தளம் அழிப்பு என்ற பாக்., பொய் பிரசாரம்… முறியடிப்பு! நேரில் சென்று வீரர்களை சந்தித்து மோடி நிரூபணம்
பஞ்சாபின் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தை சேதப்படுத்தியதாகவும், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை தகர்த்ததாகவும் பாகிஸ்தான் செய்து வந்த பொய் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தகர்த்தார். விமானப்படை தளத்துக்கு நேரில் சென்று வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன், படங்களை வெளியிட்டு, பாகிஸ்தான் செய்தது பொய் பிரசாரம் என்பதை உலகுக்கு காட்டியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ என்ற பெயரில், நம் படைகள் தகர்த்தன.
இதைத் தொடர்ந்து, நம் நாட்டின் பல ராணுவ மையங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தியது. அவை முறியடிக்கப்பட்டதுடன், பாகிஸ்தான் ராணுவ தளங்கள் குறி வைத்து தாக்கப்பட்டு, பெரிய அளவில் சேதம் ஏற்படுத்தப்பட்டது.
பதிலடி
இதன் வாயிலாக, பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவாக இருப்பது உலக நாடுகளுக்கு சுட்டிக் காட்டப்பட்டது.
மேலும், பயங்கரவாதிகள் ஒரு சிறிய தாக்குதல் நடத்தினாலும், பயங்கரவாத அமைப்புகளுடன், அதற்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் அவர் ஆற்றிய உரை வாயிலாக, பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் எச்சரிக்கை விடுத்ததுடன், உலக நாடுகளுக்கும் நம் நாட்டின் நோக்கத்தை பிரதமர் மோடி சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையே, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு எதிராக பதிலடி கொடுத்ததாகவும், இந்தியாவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் பாகிஸ்தான் பிரசாரம் செய்து வருகிறது.
குறிப்பாக, பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.
மேலும், பாக்., விமானப்படைக்கு சொந்தமான, சீன தயாரிப்பான ஜே.எப் -17 போர் விமானம், இந்திய ராணுவத்தின், ரஷ்ய தயாரிப்பான எஸ் – 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை தகர்த்தாகவும் கூறியது. இதைத்தவிர, இந்திய போர் விமானங்கள், ரேடார்களையும் தகர்த்ததாக கூறியது.
பாகிஸ்தானின் இந்த பொய் பிரசாரத்தை, பிரதமர் மோடி நேற்று உலகிற்கு அம்பலப்படுத்தினார்.
ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு விமானப்படை வீரர்களை சந்தித்து, அவர்களது வீரத்தை பாராட்டி பேசியதுடன், சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்து கூறினார்.
உறுதி
பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், விமானப்படை தளம், எஸ் – 400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு, விமானப்படை போர் விமானங்கள் முன்பாக எடுத்த படங்களையும் மோடி வெளியிட்டார்.
தங்களால் தாக்குதலுக்குள்ளானதாக பாகிஸ்தான் தெரிவித்த விமானப்படை தளத்துக்கு பிரதமரே நேரில் சென்றுள்ளார். இதனால், விமானப்படை தளம் பாதுகாப்பாக இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.