Thursday, May 15, 2025
இந்தியா

அமெரிக்க மத்தியஸ்தத்தை ஏற்கிறதா அரசு? பிரதமர் பதில் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை

‘காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை மத்திய அரசு ஏற்கிறதா. டிரம்ப் விடுத்த வர்த்தக மிரட்டலுக்கு பயந்து போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதா. என்ற கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்’ என, காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வந்த மோதல், மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது.இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார். அதன் பிறகே, மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், ‘ஆப்பரேஷன் சிந்துார்’ குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு உரையாற்றினார்.அவரது உரைக்கு சில மணி நேரம் முன்னதாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘அமெரிக்காவின் மத்தியஸ்த நடவடிக்கையால் அணு ஆயுத போர் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், போரை நிறுத்தாவிட்டால் இந்தியா-பாக்., உடனான வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்படும் என கூறியதை அடுத்து, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மிக தாமதமான பிரதமரின் உரைக்கு சில மணி நேரங்கள் முன் பேசிய அதிபர் டிரம்பின் வார்த்தைகளால், பிரதமரின் பேச்சு தலைகீழாக மாறியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மவுனம் காக்கிறார்.

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்த நடவடிக்கையை மத்திய அரசு ஏற்கிறதா. இரு தரப்புக்கும் பொதுவான இடத்தில் பேச்சு நடத்த, மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதா.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஆட்டோமொபைல், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுக்கான சந்தையை மத்திய அரசு திறந்துவிடுமா. இந்த கேள்விகளுக்கெல்லாம் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.

நம் ஆயுதப்படைகளின் செயல்பாட்டை சல்யூட் அடித்து வரவேற்கிறோம். அவர்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். நாங்கள் எப்போதும் அவர்களுடன் துணை நிற்போம். அதே நேரம், பிரதமர் மோடி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தே தீரவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *