Thursday, May 8, 2025
இந்தியா

மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவில் இன்று(மே 8) காலை 8:35 மணி முதல் 8:55 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி மதுரை நகர் விழாக் கோலம் பூண்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாண வைபோகத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.

போக்குவரத்து மாற்றம்

மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று இரவு 11:00 மணி முதல் மதுரை ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்லவோ, ‘பார்க்கிங்’ செய்யவோ அனுமதி இல்லை. அனுமதி சீட்டுடன் வரும் வாகனங்கள் இன்று காலை 6:00 மணி முதல் அனுமதிக்கப்படும்.

* மஞ்சள் நிற அனுமதி சீட்டு உள்ளவர்களின் வாகனங்கள் மேல ஆவணி மூல வீதியில் நிறுத்த வேண்டும். இதற்காக வடக்கு – மேலமாசிவீதி சந்திப்பு, வடுககாவல் கூடத்தெரு, தானப்ப முதலி தெரு வழியாக வரவேண்டும். திருக்கல்யாணம் முடிந்ததும் பண்டு ஆபீஸ், ஜான்சிராணி பூங்கா, நேதாஜி ரோடு வழியாக வெளியேற வேண்டும்.

* ரோஸ் நிற அனுமதி சீட்டு உள்ளவர்கள் வடக்கு ஆவணி மூல வீதியில் நிறுத்த மேற்கண்ட பாதை வழியாக வரவேண்டும். திருக்கல்யாணத்திற்கு பிறகு தளவாய் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக செல்ல வேண்டும்.

* நீலநிற அனுமதி சீட்டு உள்ளவர்கள் தெற்காவணி மூல வீதியில் நிறுத்த கட்டபொம்மன் சிலை, நேதாஜி ரோடு, ஜான்சிராணி பூங்கா வழியாக வரவேண்டும். அதேபோல் விளக்குத்துாண், தெற்குமாசிவீதி, மேலமாசிவீதி, நேதாஜி ரோடு வழியாகவும் வரலாம். திருக்கல்யாணத்திற்கு பிறகு வெங்கல கடைத்தெரு, விளக்குத்துாண் வழியாக வெளியேற வேண்டும்.

அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் அதிகாலை 5:00 மணி முதல் கிழக்கு, தெற்கு, வடக்குமாசிவீதியில் நிறுத்த வேண்டும். கீழஆவணி மூலவீதியில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது.

தேரோட்டம்

மே 9 தேரோட்டத்தை முன்னிட்டு இன்று இரவு 10:00 மணி முதல் மாசி வீதிகளில் எந்த வாகனமும் நிறுத்தக்கூடாது. தேரோட்டத்தை காண வருவோர் தங்கள் வாகனங்களை மாரட்வீதிகளில் நிறுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *