Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை கட்டுமான பணி பில்லர் சரிந்து விழுந்து தொழிலாளி பலி: இரு தொழிலாளர்கள் படுகாயம்

கம்பம் : தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டட முதல் தளத்தில் சிலாப் சரிந்து விழுந்ததில் மதுரை தொழிலாளி நம்பிராஜன் பலியானார். இருவர் காயமடைந்தனர்.

கம்பம் அரசு மருத்துவமனையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் கீழ் பிரசவ வார்டுமேம்படுத்தும் பணி ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிதியின் கீழ் 3 மாடி புதிய கட்டடம் கட்டுமானப்பணி 2022 ஜனவரியில் துவங்கியது. ஓராண்டில் பணிகள் நிறைவு செய்ய வேண்டும்.

ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் கட்டட பணிகள் நிறைவு பெறவில்லை. இந்த கட்டடத்தின் போர்டிகோவின் மேல் பகுதியில் நின்று நேற்று காலை 3 தொழிலாளர்கள் சிமென்ட் பூச்சு வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது முதல் தளத்தின் இரண்டு பக்கங்களிலும் இருந்த பில்லர்கள் மற்றும் சிலாப்புகள் திடீரென இடிந்து கீழே பூச்சு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது.

இந்த விபத்தில் மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்த நம்பிராஜன் 40, அதே இடத்தில் பலியானார். உடன் வேலை செய்து கொண்டிருந்த மதுரையை சேர்ந்த செல்வம் 32, முனிஷ் என்ற சதீஷ் குமார் 42 பலத்த காயமடைந்தனர். கம்பம் தீயணைப்பு துறை பணியாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

உறவினர்கள் மறியல்

சம்பவத்தை அறிந்து நம்பிராஜனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை அரசு மருத்துவமனை முன் ரோடு மறியலில் ஈடுபட்டனர். ஒப்பந்தகாரர் மீதும், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். தெற்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி சமாதானம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *