இயற்கையை பாதுகாத்தால் வாழ்க்கை முழுவதும் சொர்க்கம்
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் எனக் கூறி மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியத்தை பள்ளி, கல்லூரிகள் மட்டும் இன்றி தன்னார்வலர் அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பருவ மழை பொய்த்துப் போவதற்கு முக்கிய காரணம் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது ஆகும். பலன் தரும் மரக்கன்றுகளை நடுவதோடு, தெருக்கள் தோறும் மரக்கன்றுகள் வளர்க்கும் வகையில் தன்னார்வலர்கள், மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறு போடி அன்னை இந்திரா நினைவு ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் மரங்கன்றுகள் நட்டு வளர்ப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வீடுதோறும் ஒரு மரக்கன்று
எம்.சிவனேஸ்வர மணிச்செல்வன், தலைமை ஆசிரியர், போடி: நாம் உயிர் வாழ சுத்தமான காற்று, நீர் அவசியம். சுற்றுப் புறத்தை மாசில்லாமல் துாய்மையாக வைப்பது நமது கடமை. பள்ளி வளாகத்தில் ஆக்சிஜன் தருவதோடு, புன்னகையோடு வரவேற்கும் புங்கை, வேம்பு, வாகை, கொன்றை, பாதாம், அரசு, யூகலிப்டஸ், மா, கொய்யா, சீதா, அரை நெல்லி மரங்களும், செம்பருத்தி, ரோஜா போன்ற செடிகளை ஆசிரியர்கள், மாணவர்கள் மூலம் பசுமையாக பராமரித்து பள்ளியில் வளர்த்து வருகின்றோம். தினமும் காலை, மாலை நேரங்களில் பூக்களில் உள்ள தேனை குடிப்பதற்காக குயில், கம்மிங் பேர்ட்ஸ் மட்டும் இன்றி மைனா, புறா, ஊர் குருவி உள்ளிட்ட பறவைகள் வந்து செல்கின்றன. வெயில் காலங்களில் வகுப்பறைக்கு இதமான காற்று வீசுவதால்மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு ஒரு மரக்கன்று வளர்க்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட்டாலே இயற்கையே நமக்கு சொர்க்கமாக அமையும்., என்றார்.
விழிப்புணர்வு
எம்.முத்து கார்த்திகா, ஆசிரியை, போடி: விளையாட்டு மைதானம் தவிர்த்து வளாகம் முழுவதும் மரங்கன்றுகள் வளர்த்து அதன் நிழலில் வாழ்கின்றோம். நல்ல சுவாசமும், வெயில் காலங்களில் குளிர்ச்சியும், மன அமைதி, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது இல்லை. மாணவர்கள் கவனம் சிதறாமல் படிப்பதற்கு உகந்த சூழ்நிலை உள்ளது.
மாணவர்களின் சிந்தனை, கற்பனைத் திறன், நல்ல ஒழுக்கங்களை வளர்க்க உதவுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, மழை குறைவு, உயிரினங்கள் அழியும் நிலை குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறி வருகிறோம். சுவாசிக்க ஆக்சிஜன் என்னும் துாய்மையான காற்று கிடைப்பது, மரங்களின் பூ, பட்டை, வேர் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மக்காத குப்பையால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், மக்கும், மக்காத குப்பையை பிரித்து எடுப்பது குறித்து கற்றுத் தருகின்றோம். விழிப்புணர்வு
ஏற்படுத்தி வந்தாலும், ஓட்டல்களில் சூடான காபி, டீ, பாலிதீன் பைகளில் தருவது குறைவது இல்லை.
பாலின பைகளை பயன்படுத்துவதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. பாலிதீன் பைகளை புறக்கணித்து இயற்கை வளங்கள், உயிரினங்களுக்கு ஆபத்து இல்லாத வகையில் துணிப்பை பயன் படுத்தி வந்தாலே பசுமையான மாற்றத்தை உருவாக்க முடியும்., என்றார்.