1.5லட்சம் லிட்டர் பால் கொள்முதல் இலக்கு அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்
தேனி தேனி மாவட்டத்திற்கு 1.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.
தேனியில் பால் கொள்முதலை கூட்டுவது, சங்கங்களின் செயல்பாடு, ஆவின், பால்வளத்துறையினருடன் அமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கலெக்டர் ஷஜீவனா முன்னிலை வகித்தார்.கூட்டத்திற்குப்பின் அமைச்சர் கூறியதாவது: மாவட்டத்தில் சில மாதங்களில் 15ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் 500 பேருக்கு மினி மாட்டுப்பண்ணை அமைத்து தொழில் முனைவோராக்க உள்ளோம். பாலின் தரத்தை ஆய்வு செய்து, விலை வழங்கும் திட்டத்திற்கு வரவேற்பு உள்ளது. இதனால் பாலின் தரம் உயர்ந்துள்ளது. புதிதாக காப்பீட்டு திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
ஆவின் தேவையான பால் போக மீதி பாலை தனியாருக்கு கொடுப்பதில் தவறில்லை. இதனை ஒழுங்குபடுத்த திட்டம் வகுக்க உள்ளோம். கடந்த ஆட்சியில் தாறுமாறாக பணியாளர்கள் நியமித்தனர். இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைத்து வருகிறோம். பணியாளர்களுக்கு வழங்கி உள்ள இலக்கை அடைந்தால் இடமாற்றம் இருக்காது. தேனி மாவட்டத்திற்கு 1.5லட்சம் லிட்டர் இலக்கு நிர்ணயித்துள்ளோம். என்றார். எம்.பி., தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் சரவணக்குமார், மகாராஜன், தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, ஆவின் மேலாளர் வாணீஸ்வரி பங்கேற்றனர்.