சர்வீஸ் ரோடு விரைவாக அமைக்க வேண்டும் அதிகாரிகளுக்கு எம்.பி., கண்டிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடக்கும் பகுதியில் சர்வீஸ்ரோடு அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் கண்டித்தார்.
தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பால பணி தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலத்தின் ஒருபகுதி அதாவது அரண்மனைப்புதுார் பகுதியில் மட்டும் பணி விரைவு படுத்தப்பட்டு நடந்து வருகிறது. மேம்பால பணி நடந்தாலும் சர்வீஸ் ரோடு அமைக்கவில்லை.இதனால் இவ்வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் சிரமமடைகின்றனர்.
மேம்பால பணி நடைபெறும் பகுதியில் எம்.பி., தங்கதமிழ்செல்வன் நேற்று ஆய்வு செய்தார்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வி, கோட்டபொறியாளர் முருகன், உதவி பொறியாளர் ரம்யா, பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் உடனிருந்தனர்.
சர்வீஸ்ரோடு இல்லாததால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
விரைவாக இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என அதிகாரிகளை கண்டித்தார். மேம்பாலத்தின் ஒரு புறம் நிலஎடுப்பு பிரிவினர் இடங்களை எடுத்து தரவேண்டி உள்ளதுஎன அதிகாரிகள் பதில் கூறினர்.
எம்.பி., கூறுகையில், இன்னும் 10 நாட்களில் மேம்பால பணி நடைபெறும் இரு பகுதியிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்படும். மேம்பால பணி ஓராண்டில் நிறைவடையும். என்றார்.
அதிகாரிகள் கான்ட்ராக்டருக்கு ஏன் பயப்படுகிறீர்கள்
ஆய்வின் போது சரவணக்குமார் எம்.எல்.ஏ., கூறுகையில், ‘நான் ஏற்கனவே சர்வீஸ் ரோடு அமைக்க அதிகாரிகளை அறிவுருத்தினேன்.ஆனால் பணி செய்யவில்லை. அதிகாரிகள் கான்ட்ராக்டருக்கு ஏன் பயப்படுகிறீர்கள். சரியாக வேலை செய்யவில்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள்’ என்றார்.
* தனுஷ்கோடி- கொச்சி தேசிய நெடுஞ்சாலை உசிலம்பட்டி, ஆண்டிபட்டி தேனி, போடி ஆகிய நகர்பகுதிகள் வழியாக செல்கிறது. இதனால் இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது.
இதனை தவிர்க்க உசிலம்பட்டியில் இருந்து போடி வரை புதிய பைபாஸ் அமைக்க உள்ள திட்டத்தை கண்காணிப்பு பொறியாளர் மாதிரி வரைவு படத்துடன் எம்.பி., யிடம் விளக்கினார்.