போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கலெக்டரிடம் மனு
தேனியில் போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கலெக்டரிடம் மனு வழங்கினர்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனீப், மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாலம், ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுமக்கள் உதவித்தொகை கோரியும், வீட்டு மனைபட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 343 மனுக்கள் வழங்கினர்.
கோம்பைத்தொழு போசந்தாபுரம் விவசாயிகள் கருப்பசாமி, ஜெயக்குமார், ஜெயபாண்டி வழங்கிய மனுவில், விவசாய தோட்டங்களுக்கு பல ஆண்டுகளாக சென்று வந்த பாதையை தனியார் அடைத்து விட்டனர். இதனால் விவசாய பொருட்கள் தோட்டத்திற்கும், விளை பொருட்களை தோட்டத்தில் இருந்து வெளி கொண்டு வர இயலாத நிலை உள்ளது. பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரினர்.
ஜெனரல் எம்ப்ளாயிஸ் யூனியன் மாவட்ட செயலாளர் ராஜதுரை மனுவில், தேனி நகர்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். என்றிருந்தது.
குறைதீர் கூட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்நலத்துறை சார்பில் 10 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரம், விபத்தில் மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. தொடர்ந்து லோக்சபா தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.