‘டிஜிட்டல் கிராப் சர்வே’ பணி; புறக்கணித்த வி.ஏ.ஓ.,க்கள்
டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு கூடுதல் அலுவலர்களை நியமிக்காததை கண்டித்தும், வருவாய் கிராமங்களை பிரித்து கூடுதல் பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தியும் உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் முன் வி.ஏ.ஒ.. க்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் கார்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமர் முன்னிலை வகித்து, பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்புச் செயலாளர் மகேந்திரகுமார், உத்தமபாளையம் வட்டாரத் தலைவர் பிரபு, போடி வட்டாரத் தலைவர் ஆனந்தகுமார் உள்ளிட்ட வி.ஏ.ஓ.க்கள் திரளாக பங்கேற்றனர்.
டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் சிரமம் இருப்பதால் அதற்குரிய உபகரணங்களை, வழங்க வேண்டும்.
கூடுதல் பணியாளர்களை நியமித்து ஒரு பதிவிற்கு ரூ.10 வழங்க அரசு பேச்சு வார்த்தையில் ஒப்புக் கொண்டது. ஆனால் இதுவரை அந்த உறுதி மொழிகள் நிறைவேற்றப் படவில்லை.
இதனால் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகள் செய்வதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வி.ஏ.ஓ.,க்கள் மன உளைச்சளில் உடல் பாதிப்பு அடைந்துள்ளனர்.
எனவே கடந்த ஆகஸ்டில் இருந்து டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை புறக்கணிப்பது என அனைத்து வி.ஏ.ஒ. சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது. மேலும் மகளிர் மாற்றுத் திறனாளி வி.ஏ.ஓ.,க்கள், டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் எதிர் கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு அவர்கள் பணியாளர்களை நியமித்துக் கொள்ளவும், பதிவுகள் அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு உரிய அரசாணைகள் பிறப்பிக்க கோரிக்கை எழுப்பினர்.