செயல் அலுவலர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புங்கள்; நிர்வாக சிக்கலில் தவிக்கும் 10 பேரூராட்சிகள்
தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், நிர்வாகம் நடத்த முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் அரசுக்கு கடிதம் எழுதியும், காலியாக உள்ள பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் அரசு ஊழியர்கள், அலுவலர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளது. மாவட்டத்தில் தேர்வு நிலை 11, இரண்டாம் நிலை 3, முதல் நிலை 8 ஆக மொத்தம் 22 பேரூராட்சிகள் உள்ளன. பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளன. இதனால் ஒரு செயல் அலுவலர் ஒன்றுக்கு மேற்பட்ட பேரூராட்சிகளை கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பல ஊர்களின் பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்னைகள் தீர்க்க முடியாமல் பிரச்னைகள் நீடித்து வருகிறது. உதாரணத்திற்கு அனுமந்தன்பட்டி செயல் அலுவலர் முருகன், காமயகவுண்டன்பட்டியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இவர் காமயகவுண்டன்பட்டிக்கு வருவதே இல்லை. தூய்மை பணியாளர் நியமனத்தில் முடிவு எடுக்காத நிலையால் இங்கு டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை மாவட்டத்தில் 10 பேரூராட்சிகளில் நிலவுகிறது. நிதி முறைகேடுகள் அதிகம் நடைபெறும் பேரூராட்சிகளில், செயல் அலுவலர்களும் இல்லையென்றால் நிலைமை மோசமாக போய்விடும் என செயல் அலுவலர்கள் புலம்புகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அரசுக்கு டி.ஒ. லெட்டர் ( Demi official. Letter ) இரண்டு முறை அரசுக்கு எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.- பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது. எனவே காலியாக உள்ள பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட வேண்டும்.