நான்கு நாட்களில் இருமடங்கு உயர்ந்த தக்காளி விலை கிலோ ரூ.70 என்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
மாவட்டத்தில் நான்கு நாட்களில் தக்காளி விலை இருமடங்காக கிலோ ரூ.70 என உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் தக்காளி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. அனைத்து பருவங்களிலும் தேவாரம், ஆண்டிப்பட்டி, ஓடைப்பட்டி, தர்மாபுரி உள்ளிட்ட பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. வருஷநாடு பகுதிகளில் மட்டும் கோடை காலத்தில் அதிகம் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடை காலத்திற்கு முன் அதிகபடியான வெப்பம், கத்தரி வெயில் காலத்தில் நல்ல மழை பெய்ததால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் சரிவை சந்தித்தனர். மே, ஜூனில் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் நிலவிய தக்காளி பயிருக்கு ஏற்ற சீதோஷ்னம், பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வரத்து ஆகியவற்றால், கடந்த மாத இறுதியில் விலை குறைந்தது. சில்லரையில் கிலோ ரூ.30க்கு விற்பனை ஆனது. ஜூலை 10ல் இதே விலை நீடித்தது.
ஆனால் நேற்று (ஜூலை 14) தேனி உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ. 65வரை விற்பனையானது. தெருக்களில் உள்ள கடைகளில் ரூ.70 வரை விற்பனை ஆனது.
வேளாண் விற்பனைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாவட்டத்தில் தக்காளி சாகுபடிக்கான சரியான கால நிலை இன்றி காணப்பட்டது. சில இடங்களில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் மழையால் பாதிக்கப் பட்டுள்ளதால் வரத்து குறைந்துள்ளது. தேனி மார்க்கெட்டுகளில் இருந்து தக்காளி வாங்க விருதுநகர், சாத்துார், ராமநாதபுரம் வியாபாரிகள் வருகின்றனர். தேவை அதிகம் உள்ளதால் விலை உயர்ந்துள்ளது. விலையை கேட்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.’, என்றனர்.