தென்னிந்திய பா.பி., கட்சி போராட்டம்: மருத்துவக் கல்லுாரியில் தண்ணீர் பற்றாக்குறை
ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பாட்டிற்கான தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வலியுறுத்தி தென்னிந்திய பா.பி., கட்சியினர் குடிநீர் வாரிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 5000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். உள் நோயாளிகள் வார்டுகளில் 2000க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
மருத்துவமனை பயன்பாட்டிற்கு வைகை அணை, குன்னூர் ஆற்றில் இருந்தும் கொண்டுவரப்படும் நீர் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மருத்துவமனை மற்றும் வார்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கழிப்பறைக்கு தேவையான தண்ணீர் வசதியின்றி பலரும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணா கோரி தென்னிந்திய பா.பி.,நிறுவன தலைவர் திருமாறன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வைகை அணை அருகே குடிநீர் வாரிய அலுவலகத்தில் கூடுதல் நீர் வழங்க வலியுறுத்தி முறையீடு போராட்டம் நடத்தினர்.
குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் அங்கு இல்லை. இதனால் பிரச்சனை குறித்து அலுவலர்களிடம் தெரிவித்து சென்றனர்.
நிறுவன தலைவர் திருமாறன் கூறியதாவது: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் தண்ணீர் பற்றாக்குறையால் சுகாதாரம் பாதித்துள்ளது.
வைகை அணையில் இருந்தும், குன்னூர் ஆற்றில் இருந்தும் தினமும் 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கும் திட்டம் உள்ளது. பம்ப் செய்யப்படும் நீரை முழுமையாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் நடவடிக்கை இல்லை. முறையீடு போராட்டம் நடத்தி உள்ளோம். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்றார்.