87 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் இன்று துவக்கம்
தேனி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் இயங்கும் அரசு உதவி பெறும் 87 தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று துவங்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் உள்ள உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு உணவு தயாரிப்பது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. வட்டாரம் வாரியாக தேனி 14, பெரியகுளம் 12, ஆண்டிப்பட்டி 11, மயிலாடும்பாறை 5, போடி 16, சின்னமனுார் 7, கம்பம் 4, உத்தமபாளையம் 18 என 87 பள்ளிகளில் இத்திட்டம் துவங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் 6, 847 மாணவர்கள் பயனடைவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.