தேசிய அளவிலான தடகளப் போட்டி கூடலுார் பள்ளி மாணவர் சாதனை
கூடலுார்: தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி மாணவர் இன்பத்தமிழன் சாதனை படைத்தார். வெற்றி பெற்று திரும்பிய இவருக்கு பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் இன்பத்தமிழன் ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் தேசிய அளவில் நடந்த 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 200 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். மேலும் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இவர் சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளார். பள்ளி திரும்பிய இவருக்கும், உடற்கல்வி இயக்குனர் கருத்தபாண்டியனுக்கும், தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் தலைமையில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி செயலாளர் ராம்பா, தலைவர் பொன்குமரன், பொருளாளர் சிவாபகவத், நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில் இன்பத்தமிழன் தங்கப்பதக்கம் பெற்று 39 ஆண்டு சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.