அகற்றிய மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நட வலியுறுத்தல்!
அகற்றிய மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நட வலியுறுத்தல்! விரிவாக்கத்திற்கு பின் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் ரோடு விரிவாக்கப் பணிக்காக ஒன்றரை ஆண்டுக்கு முன் வெட்டிய 229 மரங்களுக்கு பதிலாக பத்து மடங்கு மரக்கன்றுகளை நட அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார் நகர்ப் பகுதியில் உள்ள 4 கி.மீ., தூர ரோடு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் 2022 ஏப்ரலில் துவங்கியது.
விரிவாக்கப் பணிக்காக இடையூறாக இருந்த அரசமரம், ஆலமரம், புளியமரம், இலவமரம் உள்ளிட்ட 229 மரங்களை 2023 பிப்ரவரியில் வெட்டி அகற்றப்பட்டது.
இதில் நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழமையான ஒரு சில மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறின்றி இருந்ததால் அதை பாதுகாத்து மற்ற அனைத்து மரங்களுக்கு பதிலாக பத்து மடங்கு மரக்கன்றுகளை நட வேண்டும் என அப்போதே சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். ஆனால் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் மாநில நெடுஞ்சாலை துறையினர் பெயரளவிற்கு ஒரு சில மரக்கன்றுகளை மட்டும் நடவு செய்து கணக்கு காட்டி விட்டு, தொடர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்யாமல் விட்டுவிட்டனர்.
அருண், உறுப்பினர், சோலைக்குள் கூடல் அமைப்பு, கூடலுார்:
மரங்கள் இருக்கும் போது குளுமையாக இருந்த கூடலுார் மாநில நெடுஞ்சாலை, ரோடு விரிவாக்க பணிக்குப் பின் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
மரங்கள் அதிகம் இருந்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் வைக்க வாய்ப்புள்ள இடங்களில் உடனடியாக மரக்கன்றுகள் வைக்கவும், பொது இடங்களில் கூடுதல் மரக்கன்றுகளை வைக்கவும் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக முன் வர வேண்டும்.