பேருந்து நிலையங்களில் பொருட்கள் வாங்குவோர் கவனிக்க வேண்டியவை
தேனி, ஜன.22: பேருந்து நிலையங்களில் பொருட்கள் வாங்கும்போது கண்காணிக்க வேண்டியவை குறித்து நுகர்வோர் அமைப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, கடையில் உள்ள தராசு அரசால் முத்திரையிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மின்னணு தராசு என்றால் எடை காட்டும் இன்டிகேட்டர் 0 வில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
பேக் செய்யப்பட்ட பொருட்கள் வாங்கும்போது தயாரித்தவர், பேக்கிங் செய்தவர், இறக்குமதியாளர் பெயர் மற்றும் முழு முகவரி உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அதிகபட்ச சில்லறை விலையை (வரிகள் உட்பட) கவனித்து வாங்க வேண்டும். பாக்கெட்டில் குறிப்பிடப்பட்ட நிகர எடையை விட குறைவாக இருந்தாலோ, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தாலோ புகார் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.