தேனி வழியாக போதைப் பொருட்கள் கடத்துவது… அதிகரிப்பு
தேனி வழியாக போதைப் பொருட்கள் கடத்துவது… அதிகரிப்பு ; மாநில, மாவட்ட எல்லையில் வாகன சோதனை தீவிரம்
புகையிலை, குட்கா, போதை பொருட்களால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க கலெக்டர் ஷஜீவனா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பின் அக்குழுவினர் மாவட்டத்தில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டு, பொது மக்கள் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. அதிகாரிகள் ஆய்வில் புகையிலை பொருட்கள் விற்பனையை போலீசார், உள்ளாட்சி அமைப்புகள் கவனம் செலுத்தாதது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து டீ, மளிகை, பெட்டி கடைகளில் வியாபாரம் செய்ய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்பவர்கள் கண்காணிக்கப்பட்டனர். தொடர் சோதனை முடிவில் தேனி மாவட்டத்திற்கு கர்நாடகாவில் இருந்து புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வருவதும், அதனை லாரிகள், பஸ்கள், கார்களில் கொண்டு வருவதையும் கண்டறிந்தனர். அவற்றை மொத்தமாக பதுக்கி வைத்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு அனுப்புவதும் விசாரணையில் தெரிய வந்தது. பிற மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு புகையிலைப் பொருட்களை கடத்தி வரும் டிரைவர்களுக்கு கூடுதல் பணம் வழங்கப்படுகிறது.
மொத்தமாக புகையிலைப் பொருட்கள் போலீசாரிடம் சிக்கும் போது, சிக்கியப் பொருட்களுக்கு பதிலாக இருமடங்கு புகையிலை பொருட்களை மொத்த வியாபாரிகள் வழங்குவதாக, சில்லரை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சில கடைக்காரர்கள் தொடர்ந்து விற்பனை செய்கின்றனர். மேலும் விற்பனையை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.