கணவர் தற்கொலைக்கு பின் மனைவிக்கு கிடைத்த தொகை இறந்தவரின் வீட்டில் மேலும் சோகம்
மூணாறு: கட்டப்பனையில் ஊரக வளர்ச்சி கூட்டுறவு வங்கியில் வர்த்தகர் தூக்கிட்டு தற்கொலை செய்த பிறகு அவரது தொகையை மனைவியின் கணக்கில் வங்கி செலுத்தியது.
இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் பேன்சி கடை நடத்தி வந்த சாபு 56, அங்குள்ள ஊரக வளர்ச்சி கூட்டுறவு வங்கியில் ரூ.90 லட்சம் ‘டெபாசிட்’ செய்தார். அத்தொகையில் பல தவணையாக ரூ.75 லட்சம் திரும்ப பெற்ற நிலையில் ரூ.15 லட்சம் இருப்பில் இருந்தது.
இந்நிலையில் தொடுபுழாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி மேரிகுட்டியின் சிகிச்சை செலவுக்கு பணம் தேவைபட்டதால் சாபு வங்கியை அணுகினார். வங்கி நிர்வாகம் கணக்கில் உள்ள பணத்தை திரும்ப கொடுக்காமல் ஊழியர்கள் சாபுவிடம் அவமரியாதையாக நடந்து கொண்டனர்
அதனால் மன உளைச்சலுக்கு ஆளான சாபு டிச. 20ல் காலை வங்கி அலுவலக கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் கட்டப்பனையை உலுக்கிய நிலையில் காங்கிரஸ், பா.ஜ., வர்த்தக சங்கம் ஆகியோர் கடையடைப்பு உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
செலுத்தியது
இந்நிலையில் சாபுவின் கணக்கில் இருந்த தொகையை அவரது மனைவியின் கணக்கில் டிச.30 செலுத்தியதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
தாயும் இறந்தார்
தற்கொலை செய்து கொண்ட சாபுவின் தாயார் திரேஷியம்மா 90, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தார். இந்நிலையில் மகன் சாபு தற்கொலை செய்த சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர் நேற்று முன்தினம் இறந்தார். 11 நாட்கள் இடைவெளியில் மகன், தாயார் ஆகியோர் இறந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.