ரூ.10 லட்சம் போதை ஆயில் பறிமுதல்: கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கைது
ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை ஆயிலை குமுளியில் கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். தேனி மாவட்டத்தை ஒட்டிய, தமிழக-கேரள எல்லையான குமுளி சோதனைச்சாவடி வழியாக, கேரளாவுக்கு போதை ஆயில் (கஞ்சா எண்ணெய்) கடத்தப்படுவதாக, பீர்மேடு கலால்துறை தாலுகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், கலால் வட்ட ஆய்வாளர் பிரசாத் தலைமையில் அதிகாரிகள் குமுளி சோதனைச் சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில், தமிழகத்தில் இருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், சுமார் 900 கிராம் கஞ்சா எண்ணெய் (போதை ஆயில்) கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போதை ஆயில், காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக் காரில் இருந்த இடுக்கி மாவட்டம், கோதமங்கலத்தை சேர்ந்த அமல்ஜார்ஜ் (32), சச்சுசசிதரன் (31), அமீர் (41) ஆகியோரை கைது செய்தனர். கலால்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘ஆந்திராவில் இருந்து போதை ஆயிலை கேரளாவுக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.10 லட்சம். இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.