38 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் சந்திப்பு
தேனியில் 38 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சந்தித்து, தங்களது பால்ய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கடந்த 1984 –1986ல் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற ஆசிரியர்கள் தேனியில் ஓட்டலில் சந்திக்கும் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். திண்டுக்கல் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆனந்தன், ஆண்டவர், முருகேசன், ராஜாமாரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் செந்தில், சண்முகம் ஆகியோர் பணி நிறைவு பெற்றதால் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் தேனி வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராஜமுருகன், வீராச்சாமி, சுதந்திரன், சிறப்பு விருந்தினராக முன்னாள் வட்டார கல்வி அலுவலர் தமிழன் பங்கேற்று வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் தாங்கள் பயின்ற அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
ஏற்பாடுகளை மாணவர் விடுதி காப்பாளர் ரவிச்சந்திரன், மயிலாடும்பாறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், கம்பம் சிங்கராஜ், முத்துராஜ் ஆகியோர் செய்திருந்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.