தமிழக – கேரள எல்லையில் போலீசார் குவிப்பு: சோதனைச் சாவடியை முற்றுகையிட சென்ற விவசாயிகள்
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக தளவாடப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட லாரிகளை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவத்தை தொடர்ந்து, வள்ளக்கடவு சோதனைச் சாவடியை முற்றுகையிடுவதற்காக தமிழக விவசாயிகள் சென்றனர்.
அவர்களை தமிழக அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். தமிழக- கேரள எல்லையான லோயர்கேம்பில் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக எம்.சாண்ட் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை டிச.4ல் இரண்டு லாரிகள் மூலம் அணைப்பகுதிக்கு வள்ளக்கடவு வழியாக கொண்டு சென்றனர்.
அங்குள்ள வனத்துறை சோதனை சாவடியில் கேரள நீர்ப்பாசனத் துறையின் அனுமதி கடிதம் இல்லாமல் லாரிகளை அனுமதிக்க முடியாது என தடுத்து நிறுத்தினர். இது தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முற்றுகையிட சென்றனர்
இந்நிலையில் நேற்று காலை பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு, முல்லைச்சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன், துணைத் தலைவர் ராஜா, பொருளாளர் ஜெயபால் ஆகியோர் வள்ளக்கடவு சோதனை சாவடியை முற்றுகையிடுவதற்காக சென்றனர். அங்கிருந்த வனத்துறை அதிகாரிகளிடம் வழக்கமாக நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக தளவாடப் பொருள்களைக் கொண்டு செல்லப்படும் லாரிகளை அனுமதிக்காததற்கு காரணம் என்ன என்று கேட்டனர்.
வனத்துறை இணை இயக்குனர் உத்தரவு கொடுத்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் எனக் கூறியதால் முற்றுகையிட முயன்றனர்.
தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் விவசாயிகள் தமிழகப்பகுதிக்கு திரும்பினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
லோயர்கேம்பில் போலீஸ் குவிப்பு
ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பில் நிர்வாகிகள் வள்ளக்கடவு செல்ல முயன்றனர். லோயர்கேம்பில் போலீசார் தடுத்து நிறுத்தினர். தமிழகப் பகுதியில் இருந்து கேரளாவிற்கு மணல், ஜல்லி உள்ளிட்டவைகள் கொண்டு செல்லும் அனைத்து லாரிகளையும்தடுத்து நிறுத்த வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு விவசாயிகள் கடந்து செல்லாமல் தடுக்க வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.