Monday, April 21, 2025
மாவட்ட செய்திகள்

சீதோஷ்ண நிலை தகவல் தெரிவிக்கும் செயலி அறிமுகம் எப்போது: திராட்சை விவசாயிகள் எதிர்பார்ப்பு

சீதோஷ்ண நிலை மாற்றங்கள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே கம்பம் பள்ளத்தாக்கு திராட்சை விவசாயிகள் தெரிந்து கொள்ள வசதியாக செயலி ஒன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. இச்செயலி பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் திராட்சை 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியாகிறது. சமீபத்தில் பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. திராட்சை விவசாயிகளுக்கு அடிச்சாம்பல் நோய், மழை, பனி காலங்களில் கொடியில் இருந்து திராட்சை பழங்கள் உடைந்து உதிர்வது, திடீர் மகசூல் குறைவு என பல பிரச்னைகள் இருந்து வருகின்றன.

திராட்சை விவசாயிகளுக்கு சீதோஷ்ண நிலை மாற்றங்கள், நோய் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே எச்சரித்து அதற்கு என்ன மருந்து ஸ்பிரே செய்ய வேண்டும், கவாத்து அடிப்பதற்கு முன்கூட்டி என்ன செய்ய வேண்டும், கவாத்து எப்போது அடிக்க வேண்டும் என்பன, உள்ளிட்ட தகவல்களை திராட்சை விவசாயிகளுக்கு தெரிவிக்க மொபைல் ஆப் ஒன்றை புனேயில் உள்ள தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலையம் வடிவமைத்துள்ளது.

ஒரு திராட்சை விவசாயி தனது ஸ்மார்ட் போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், அவர் தனது தோட்டத்திற்குள் செல்லும் போதே தகவல்கள் பதிவாகும். தண்ணீர் எவ்வளவு கட்ட வேண்டும், ‘ என்ன பூச்சி மருந்து, எந்த அளவிற்கு தெளிக்க வேண்டும், என்ன நோய் தாக்க போகிறது என்ற விபரங்களும் செயலியில் பதிவாகும்,

இதுதொடர்பாக கடந்த 2023 ல் ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளுக்கு இந்த செயலி பற்றி கூறியது.

கடந்தாண்டு ஜூன் மாதமே பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை செயலி பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை.

ஆராய்ச்சி நிலையம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த திராட்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டால், திராட்சை விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *