தீர்த்தத்தொட்டி அழுக்கு பாசியை தூய்மைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை
பெரியகுளம்: ‘பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் நாளை மறுபூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுக்க உள்ள நிலையில், தென்கரை பேரூராட்சி நிர்வாகம் தீர்த்தத் தொட்டியை துாய்மைப் படுத்த வேண்டும்.’ என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்கரை பேரூராட்சியின் நூற்றாண்டு பழமையானது தீர்த்தத்தொட்டி. வராகநதியின் ஊற்றால் தீர்த்தத்தொட்டியில் 7 அடி முதல் 10 அடி வரை தண்ணீர் நிரம்பி இருப்பதால் ஏராளமானோர் இங்கு நீச்சல் பழகினர். பெரியகுளம் நகரில் அமைந்துள்ள கவுமாரியம்மன் கோயிலுக்கு நடந்து சென்று பாலாபிஷேகம் செய்வர். இந்த விசேஷம் மறுபூஜை திருவிழாவின் முக்கிய அம்சமாகும். இந்நிலையில் ஜூலை 19ல் எல்.ஐ.சி., ஏஜென்ட் சிவராமன் 40. தீர்த்தத்தொட்டி படிக்கட்டில் சேர்ந்துள்ள அழுக்கு பாசியில் வழுக்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். பேரூராட்சி பராமரிப்பில் தீர்த்தத்தொட்டியில் படிக்கட்டில் அழுக்குகளை அகற்றி, மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி, துாய்மையான ஊற்று நீர் வருவதற்கு வழி வகுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-