விளைச்சல் அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைவு
பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் காய்கறி விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்து, சைவ பிரியர்கள் காய்கறிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.
பெரியகுளம் தாலுகா மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், சருத்துப்பட்டி, ஜல்லிபட்டி, சக்கரைப்பட்டி, சாவடிப்பட்டி உட்பட பல கிராமங்களில் அதிகளவில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. விளைந்த காய்கறிகள் கமிஷன் கடைகள் மூலம் பெரியகுளம் மார்க்கெட்,அனைத்து காய்கறி கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
ஒரு கிலோ தக்காளி ரூ.100, ரூ.80 வரை விற்றது. பின் படிப்படியாக குறைந்தது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.25 ஆக குறைந்த நிலையில் நேற்று கிலோ ரூ.6 ஆக குறைந்தது. இதே போல் கடந்த மாதம் கிலோ ரூ.100 க்கு விற்ற முருங்கை பீன்ஸ் ரூ.60 ஆகவும், ரூ.200க்கு விற்ற பட்டர் பீன்ஸ் ரூ.150, ரூ.150 க்கு விற்ற சோயாபீன்ஸ் ரூ.100 ஆக விற்கப்பட்டது. ரூ.80 க்கு விற்ற கேரட், ரூ.50 ஆகவும், ரூ.100 க்கு விற்ற பச்சை பட்டாணி ரூ.50 ஆகவும், ரூ. 60க்கு விற்ற நூல்கோல், கத்தரிக்காய் தலா ரூ.30 ஆகவும், ரூ.60 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.30 ஆகவும், ரூ.50 க்கு விற்ற ஆக்ரா உருளைக்கிழங்கு ரூ.30 ஆகவும், ரூ.80 க்கு விற்ற கொடைக்கானல் உருளைக்கிழங்கு ரூ.50 ஆக குறைந்தது. ரூ.30 க்கு விற்ற ஒரு முருங்கை காய் ரூ.10, ரூ.50 க்கு விற்ற முட்டை கோஸ் ரூ.30 ஆகவும், ரூ.50க்கு விற்ற முள்ளங்கி ரூ.30 ஆகவும், ரூ.80 க்கு விற்ற பெல்லாரி வெங்காயம், ரூ.45 ஆகவும், ரூ.70 க்கு விற்ற சின்ன வெங்காயம் ரூ.40 ஆகவும் அனைத்து காய்கறிகள் விலையும் கடந்த மாதத்தை ஒப்பிடும்போது குறைவாக விற்கிறது.
காய்கறி வியாபாரி ராஜா கூறுகையில், ‘ தற்போது காய்கறி விளைச்சல் அதிகளவில் உள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்தது, விலை குறைவு சில நாட்களுக்கு நீடிக்கும்’, என்றார்.-