விலை உயர்வு குவாரிகள் வேலை நிறுத்தத்தால் ஜல்லி , எம்.சாண்ட் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் பாதிப்பு
தேனி: மாவட்டத்தில் குவாரிகள் பல மார்ச் முதல் வாரத்தில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கட்டுமான பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவை விலை யூனிட்க்கு ரூ.300 முதல் ரூ.700 வரை உயர்ந்துள்ளது .
இதனால் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.மாவட்டத்தில் உடைகல் குவாரிகள் 35, கிராவல் குவாரிகள் 4 உட்பட 46 குவாரிகள் செயல்படுகின்றன. உடைகல் குவாரிகளில் இருந்து கற்கள் நடைசீட்டு பெற்று கிரஷர்களுக்க கொண்டு செல்ப்படுகிறது. கிரஷர்களில் பல்வேறு சைஸ்களில் ஜல்லிகள், எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவை தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. மூலப்பொருட்களை இங்கிருந்து கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்ல ‘டிரான்ஸ்ட்’ எனும் மற்றொரு நடைச்சீட்டு பெற வேண்டும். இந்த நடைசீட்டு வழங்க கனிமவளத்துறை தாமதப்படுத்துவதாகவும், உரிய ஆவணங்களுடன் கனிமம் கொண்டு சென்றாலும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்த நடவடிக்கையை கண்டித்தும் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள குவாரி உரிமையாளர்கள் கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் தட்டுப்பாடு
போடி, உத்தமபாளையம் தாலுகா பகுதிகளில் செயல்படும் குவாரிகளில் இருந்து மாவட்டம் முழுவதும் குறைந்தளவு சப்ளை செய்யப்படுகிறது. வேலை நிறுத்தத்தை காரணம் காட்டி ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவை ஒரு யூனிட் ரூ. 300 முதல் ரூ.700 வரை உயர்த்தி விற்பனை செய்கின்றனர். முக்கால் இஞ்சி ஜல்லி கிடைக்காததால் கட்டுமானங்களில் கான்கீரிட் பணி செய்ய முடியவில்லை. என கட்டுமான பணி செய்வோர் புலம்புகின்றனர். தட்டுபாடு இன்றி ஜல்லி, எம்.சாண்ட் கிடைக்க கனிமவளத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
செயல்படும் குவாரிகள்
கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கட்டுமான பொருட்கள் இருப்பு வைக்க ஏற்கனவே 22 இருப்பு மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கலெக்டர் 5 இருப்பு மையங்களுக்கு அனுமதி அளித்துள்ளார். மேலும் சில மையங்களுக்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. டிரான்ஸ்சிட் நடைமுறை 2011ல் இருந்து பின்பற்ற படுகிறது. தற்போது இந்த நடைமுறை கடுமையாக பின்பற்றபடுதவதால் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அனைத்து குவாரிகளும் செயல்பட துவங்கி உள்ளது. விலை உயர்வு தொடர்பாக புகார்கள் ஏதும் வரவில்லை, புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.