புதிய திருத்த சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது ஏற்புடையதல்ல உயர்நீதிமன்றம் நீதிபதி பி.டி.ஆஷா பேச்சு
”புதிய திருத்த சட்டங்கள் நிறைவேற்றி அமலான பின்பும் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல,” என, தேனி மாவட்டம் போடியில் சார்பு நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா தெரிவித்தார்.
போடியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள வளாகத்தில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார். தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவிதா, சார்பு நீதிமன்ற நீதிபதி கவுதமன், கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி., சிவபிரசாத் முன்னிலை வகித்தனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.டி. ஆஷா, ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி சார்பு நீதிமன்றத்தை திறந்தனர்.
நீதிபதி பி.டி.ஆஷா பேசியதாவது: பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயர்களில் புதிய திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. வழக்கறிஞர்கள் எதிர்க்காமல் புதிய திருத்த சட்டம் கொண்டு வந்த பின் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல.
போலீஸ் ஸ்டேஷன் முழுதும் சி.சி.டிவி., கேமரா பொருத்தப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு குறித்த பிரச்னை இருப்பின் அதனை ஆதாரமாக கொண்டு சட்ட ரீதியாக வழக்கறிஞர்கள் கோர்டில் வாதாட வேண்டியது அவசியம் ஆகும். கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர்கள் வாதாடும் போது அதனை கவனித்து முக்கிய குறிப்புகளை எடுத்துக் கொண்டும், கோர்ட்டில் வழக்குகளை தானாக வாதாடும் வகையில் ஜூனியர் வழக்கறிஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வழக்கறிஞர் சங்க தலைவர் முருகன், செயலாளர் சந்திரசேகர், மூத்த வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணன், ராஜமோகன், ராதாகிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் சிவமணி உட்பட பலர் செய்தனர்.