இடுக்கியில் தொற்று நோய்கள் அதிகரிப்பு
இடுக்கி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் தொற்று நோய்கள் அதிகரித்தன.
இம்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. அதனால் பல்வேறு தொற்று நோய்கள் அதிகரித்தன. குறிப்பாக வைரஸ் காய்ச்சலுடன் டெங்கு, எலி, பன்றி ஆகிய காய்ச்சல்களும் அதிகரித்தன. இம்மாதம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6007 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். தவிர தனியார் மருத்துவமனை, கிளினிக் ஆகியவற்றிலும் நூற்றுக் கணக்கானோர் சிகிச்சை பெற்றதால் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிக்கும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் டெங்கு உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்தது. தவிர இம்மாதம் மூன்று பேருக்கு எலி காய்ச்சல், ஐந்து பேருக்கு பன்றி காய்ச்சல், 12 பேருக்கு மஞ்சள் காமாலை ஆகிய நோய்களும் உறுதி செய்யப்பட்டன. பன்றி காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகியவற்றின் மூலம் உயிர் பலிகளும் ஏற்பட்டன.
பருவ மழையால் சுகாதார பணிகள் நடக்காததால் தொற்று நோய்கள் பரவ காரணம் என தெரியவந்தது.