சின்னமனுார் நகராட்சியில் திரண்ட பெண்கள் ”அம்ரூத்’ திட்டத்தின் கீழ் குடிநீர் வேண்டாம்
சின்னமனூர் : அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் சப்ளை செய்ய வேண்டாம். பழைய இணைப்பிலேயே குடிநீர் சப்ளை செய்ய வலியுறுத்தியும் ஏராளமான பெண்கள் சின்னமனூர் நகராட்சியில் மனு அளித்தனர்.
நகராட்சிகளில் அம்ரூத் திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் இந்த பணிகள் நடைபெறுகிறது. சின்னமனூர் நகராட்சியில் ரூ.28 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதியில் இந்த புதிய திட்டத்தில் குடிநீர் சப்ளையை நகராட்சி துவக்கியது.
குறிப்பாக 21 வது வார்டில் முத்தாலம்மன் கோயில் தெரு, மந்தையம்மன் கோயில் தெரு, சித்தன் கோயில் தெரு , எம்.ஜி. ஆர்., சிலை வீதி உள்ளிட்ட பல வீதிகளில் குடிநீர் சப்ளை சரிவர கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சின்னமனூர் நகராட்சி அலுவலகம் சென்று, தங்களுக்கு அம்ரூத் திட்டத்தில் குடிநீர் சப்ளை வேண்டாம், பழைய இணைப்பு வழியாகவே குடிநீர் சப்ளை செய்யுங்கள் என கூறி நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்தனர்.
பெண்களை சமாதானம் செய்த அதிகாரிகள் , பகிர்மான குழாய், வால்வுகள் என அனைத்தையும் சரி செய்து, சரியான அளவில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.