புற்றுநோய் பாதிப்பை கண்டறிய இந்தியாவில் உட் கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம் நெபராக் ஷா மருத்துவ பல்கலை உதவி பேராசிரியை தகவல்
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகளை கண்டறிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்’ என, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி நுண்ணுயிரியல் துறை சார்பில் நடந்த, அறிவுப் பகிர்வு அமர்வில் அமெரிக்கா, ஓமேகா நெபராக் ஷா மருத்துவ பல்கலையின் உதவி பேராசிரியை சினேகா தெரிவித்தார்.
தேனி மருத்துவக் கல்லுாரியில் புற்றுநோய் பாதிப்பிற்கான நோய் எதிர்ப்பு சிகிச்சையில் ஸ்டெம் செல், மாற்று அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம் அதன் பயன்கள் குறித்த அமர்வு நடந்தது. முதல்வர் டாக்டர் விஜயானந்த், துணை முதல்வர் டாக்டர் தேன்மொழி, துறைத் தலைவர் டாக்டர் சுசீலா, துணை பேராசிரியர்கள் டாக்டர் லட்சுமணன், டாக்டர் குமார், இளநிலை,, முதுகலை மாணவிகள் பங்கேற்றனர்.
அமெரிக்க பல்கலையின் உதவிப் பேராசிரியை சினேகா பேசியதாவது: நமது உடலில் புற்று நோய் பாதித்த செல்களை அழித்துவிடும் திறன் உள்ள செல்கள் நோய் எதிர்ப்பு செல்களாக இயற்கையிலேயே படைக்கப்பட்டுள்ளன.
இதை மீறி புற்றுநோய் பாதித்த செல் மீள் உருவாக்கம் ஆகி புற்றுநோயை அதிகப்படுத்துகிறது. 2022ல் உலக சுகாதார கழகம் அறிவித்துள்ள தரவுகளில் இந்தியாவில் 14.13 லட்சம் பேர் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 9 லட்சத்து 15 ஆயிரத்து 827 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கு சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம். புற்றுநோய் பாதிப்பில் வாய்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் பரவலாக உள்ளதாக கணக்கெடுபில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எவ்வகை புற்றுநோயாக இருந்தாலும் தற்போது ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, கார் டி செல் மாற்று சிகிச்சை முறைகள் அதிநவீன தொழில்நுட்ப மருத்துவ முறையில் சிகிச்சையளித்து வாழ்நாளை நீட்டிக்கலாம் என்றார்.
டாக்டர் சினேகாவின் தந்தை ஆனந்தன் நன்றி கூறினார்.