வருசநாடு பகுதியில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
வருசநாடு, பிப். 18: தேனி மாவட்டம், வருசநாடு அருகே மூலவைகை ஆற்றுப் பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நத நிலையில் சிங்கராஜபுரம், பண்டாவூத்து, பசுமலைத் தேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவை கூட்டமாக தோப்புகளுக்குள் புகுந்து புதிதாக நடவு செய்யப்படும் தென்னங்கன்றுகளை வேரோடு பிடுங்கி போட்டு விட்டு செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காட்டுப்பன்றிகள் அடிக்கடி தோப்புகளுக்குள் புகுந்து நாசம் விளைவித்து வருவதால் மீண்டும் பயிரிட தயக்கம் காட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அதிகாரிகள் சென்று விவசாயிகளுக்கு தென்னை உள்ளிட்ட இழப்பீடு தொகைகள் வழங்கிட வேண்டுமெனவும், வனத்துறையினர் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி காட்டுப்பன்றிகளை ஊருக்குள் வராதவாறு வனப் பகுதிகளுக்குள் விரட்டி அடிக்க வேண்டும் எனவும் இந்தப் பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.