மூணாறில் பலத்த மழை மாட்டுபட்டி அணை திறப்பு
மூணாறில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கின.
இடுக்கி மாவட்டத்தில் ஜூலை 14 முதல் பருவ மழை வலுவடைந்து ஒரு வாரம் பலத்த மழை பெய்தது. அதன் பிறகு மழை சற்று குறைந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் பலத்த மழை நிலவியது. மாவட்டத்தில் பிற பகுதிகளை விட மூணாறில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட், டாப் டிவிஷனில் தொழிலாளர்கள் வரிசை வீடுகளில் ஆஸ்பெட்டாஸ் மேல் கூறைகள் காற்றில் பெயர்ந்தன. அதே போல் மூணாறைச் சுற்றிலும் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கின.
பல எஸ்டேட்டுகளில் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல இயதால நிலையில், பணிக்குச் சென்ற பகுதிகளில் தொழிலாளர்கள் மதியத்துடன் பணியை முடித்துக் கொண்டனர்.
அணை திறப்பு: மூணாறு அருகே மாட்டுபட்டி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர் மட்டம் முழு கொள்ளளவை (மொத்த உயரம் 162 அடி) எட்டியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் ஒரு ஷட்டர் நேற்று பகல் 3:00 மணிக்கு 10 செ.மீ., திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதனால் முதிரைபுழை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் மூணாறு, கல்லார்குட்டி, லோயர் பெரியாறு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை விடுத்தது.