காட்டு யானைகளால் காய்கறி தோட்டம் சேதம்
வட்டவடை ஊராட்சியில் பழத்தோட்டம் பகுதியில் காட்டுயானைகள் காய்கறி சாகுபடியை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மூணாறு அருகில் உள்ள வட்டவடை ஊராட்சியில் முக்கிய தொழில் காய்கறி சாகுபடியாகும். அங்கு கால நிலைக்கு ஏற்ப காரட், பீட்ரூட், உருளை கிழங்கு, பூண்டு, பீன்ஸ் வகைகள், முட்டை கோஸ் உள்பட பல்வேறு காய்கறிகள் இரண்டாயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது தென்மேற்கு பருவ மழைக்கு ஏற்ப உருளைகிழங்கு, காரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு ஆகியவை பெரும் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
யானைகள் முகாம்: வட்டவடை அருகே பழத்தோட்டம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மூன்று காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவை இரு தினங்களுக்கு முன்பு பழத்தோட்டம் பகுதியில் பிரான்சிஸ், ஜெயராம், சசி, சுரேஷ், பவானி ஆகியோரின் காய்கறி சாகுபடியை சேதப்படுத்தின.
அதே பகுதியில் நேற்று முன்தினம் இரவு அன்பழகனின் தோட்டத்தில் நுழைந்த யானைகள் இரவு முழுவதும் இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பட்டர் பீன்ஸ், உருளை கிழங்கு, முட்டைகோஸ் ஆகியவற்றை சேதப்படுத்தின.
கவலை: வட்டவடை பகுதிக்கு காட்டு யானைகள் அபூர்வமான வந்து செல்வதுண்டு. தற்போது ஒரு வாரத்திற்கு மேலாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.