பழனி செட்டி பட்டியில் பாலப்பணி டிச.27ல் போக்குவரத்து மாற்றம்
தேனி : பழனிசெட்டிபட்டி சாலை மேம்பாட்டுப் பணிகள் நடக்க உள்ளதால் டிச. 27 ல் அதிகாலை 5:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்,’ என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: பழனியப்பா பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு முதல் கிழக்கு நோக்கி ரோட்டின் நடுவே பாதசாரிகள் செல்லும் அளவில் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதனால் நேரு சிலை வழியாக போடி கம்பம் செல்லும் இலகு ரக வாகனங்கள் பூதிப்புரம் விலக்கு வழியாக சென்று திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். மறுமார்க்கத்தில் வரும் இலகு ரகவாகனங்கள் இதே வழியை பயன்படுத்தலாம். கனரக வாகனங்கள், பஸ்கள், நேருசிலையில் இருந்து பெரியகுளம் ரோடு, அன்னஞ்சி பைபாஸ் ரோட்டை அடைந்து கம்பம், போடி செல்ல வேண்டும். மறுமார்க்கத்தில் இதே வழியாக வர வேண்டும் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.