மாட்டு வண்டி சுற்றுலாவை நிறுத்த ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் கூடலுார் அருகே காஞ்சிமரத்துறையில் பெரியாறு புலிகள் காப்பகம் சார்பில் நடக்கும் மாட்டு வண்டி சுற்றுலாவை நிறுத்த கோரி பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக கேரள எல்லையில் பெரியாறு புலிகள் காப்பகம் உள்ளது. சுற்றுலா தலமான தேக்கடிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். கேரள வனம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடுக்கி மாவட்டத்தில் உள்ளன.
ஜூலை 1 முதல் தமிழகப்பகுதியான கூடலுார் அருகே காஞ்சிமரத்துறையில் பெரியாறு புலிகள் காப்பகம் சார்பில் கேரள வனத்துறை அதிகாரிகள் சுற்றுலா அலுவலக கட்டடத்தை திறந்தனர். லோயர்கேம்ப் பளியன்குடி மலை அடிவாரப் பகுதி, திராட்சைத் தோட்டங்கள், முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதிகள் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் மாட்டுவண்டி சுற்றுலாவையும் துவக்கி நடத்தி வருகின்றனர்.
கேரள வனத்துறை அதிகாரிகள் அனுமதி இன்றி தமிழகப்பகுதியில் சுற்றுலா அலுவலகம் திறந்ததற்கு பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. நேற்று விவசாய சங்க நிர்வாகிகள் காஞ்சிமரத்துறையில் இயங்கும் சுற்றுலா அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலகத்துக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், வழிகாட்டு குழு தலைவர் தலைவர் சலேத்து, தலைவர் பொன்காட்சிக்கண்ணன், துணைத் தலைவர் ராஜீவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.