சுருளியாறு நீர் மின் நிலைய ஆண்டு பராமரிப்பு மே மாதம் துவக்க முடிவு
கம்பம் : சுருளியாறு நீர்மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகள் மே மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் லோயர்கேம்பிலும், வண்ணாத்தி பாறையிலும் உள்ளது.
லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின் நிலையம் முல்லைப் பெரியாறு அணை நீரை பயன்படுத்தி, 4 ஜெனரேட்டர்கள் மூலம், 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின் நிலையம் நீர்வளத்துறையின் கீழ் உள்ளது.
வண்ணாத்தி பாறை அடர்ந்த வனப்பகுதியில் சுருளியாறு நீர்மின் நிலையம் உள்ளது. ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இரவங்கலாறு அணையிலிருந்து தண்ணீரை கீழே இறக்கி, மின் உற்பத்தி நடைபெறுகிறது.
இது மின் வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டு முழுவதும் கோடை காலத்தில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க பயன்படும் . கோடையிலும் மின் உற்பத்தி இங்கு நடைபெறுவது தனிச் சிறப்பாகும்.
ஒவ்வொரு ஆண்டும் சுருளியாறு மின் நிலையம் ஆண்டு பராமரிப்பிற்கென ஒரு மாதம் மூடப்படும்.
குறிப்பாக கோடை காலத்தில் தான் இந்த பராமரிப்பு பணி இருக்கும். இந்தாண்டு மே முதல் தேதியிலிருந்து 30 ம் தேதி வரை ஆண்டு பராமரிப்பிற்கென மூட முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அனுமதி வேண்டி வாரிய தலைமை பொறியாளருக்கு கடிதம் கொடுத்துள்ளதுள்ளனர்.
தற்போது அரசு பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது. ஏப்ரல் வரை தேர்வுகள் நடைபெறும். எனவே தேர்வுகள் முடியும் வரை உற்பத்தி இருக்கும்.
மே முதல் தேதி பராமரிப்பிற்கென மின் நிலையத்தை மூட திட்டமிட்டுள்ளனர். ஜுன் மாதம் தென் மேற்கு பருவ மழை துவங்கி விடும். எனவே அதற்கு முன் பராமரிப்பு பணிகளை முடிக்க வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.