மக்கள் பட்டா கேட்டு ரோடு மறியல்
பெரியகுளம்: கீழ வடகரையில் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க கோரி பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி, சுந்தர்ராஜ் நகர், ஐஸ்வர்யா நகர்,
கோல்டன் சிட்டி, தாய் காலனி, பிள்ளையார் கோயில் சந்து உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக வீடு கட்டி வசிக்கின்றனர். இந்த வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. பட்டா வழங்காததால் வங்கிகளில் வீடு அடமானம் கடன் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.
சப்- கலெக்டர் ரஜத்பீடனிடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறி மக்கள் பெரியகுளம்- திண்டுக்கல் ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் வாகனத்தை குறுக்கே நிறுத்தி மக்களை தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து ஸ்டேட் பாங்க் காலனி நுழைவு பகுதியில் ரோடு மறியல் செய்து ஆர்ப்பாட்டம் ஒரு மணி நேரம் நடந்தது. போக்குவரத்து பாதித்தது. தென்கரை இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுக்கு உரிய தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
தாசில்தார் மருதுபாண்டி கூறுகையில்,’ கோரிக்கை மனுவை சப்-கலெக்டர் ரஜத்பீடன் விசாரணை செய்து வருகிறார்’, என்றார்.